பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்டமிடும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக போக்குவரத்துத்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், 8 போக்குவரத்துக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிந்த பின்னர் 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முகக் கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்வோருக்கு இடையே 6 அடி இடைவெளி அவசியம். பயணிகள் அமர இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும்; வரிசைகளில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும்.
பின்புற படிக்கட்டில் ஏறி முன்புற படிக்கட்டில் இறங்க வேண்டும். மாஸ்க் இல்லாதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும். அரசு பேருந்துகளில் E- Payments viz, Goolge Pay, PayTM, JIO Pay போன்றவை மூலம் பயணிகள் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டையை பயன்படுத்தலாம். பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்டமிடும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.