வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளது. சென்னை நகர், புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவி (கடலூர்)- 7 செ.மீ., ஓசூர் (கிருஷ்ணகிரி), கடலூர் தலா 5 செ.மீ., மழை பதிவானது. வடக்கு வங்கக்கடல், வட மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.