அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலைக்காவலர் உடல்தகுதி தேர்வு, நவ. 18ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல்துறையில், ஆயுதப்படைப் பிரிவுக்கு 2465 இரண்டாம் நிலைக்காவலர்கள், சிறப்புக் காவல் படைப்பிரிவுக்கு 5962 காவலர்கள், சிறைத்துறைக்கு 208, தீயணைப்புத்துறைக்கு 191, இதர பிரிவுகளுக்கு 62 என மொத்தம் 8888 இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான போட்டித்தேர்வு கடந்த கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நவ. 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. சேலம் மாநகர், சேலம் மாவட்டம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 2767 பேர் இத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதையொட்டி நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், அதிமுக்கியத்துவம் இல்லாத பணிகளை ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகளும் கடந்த 10ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது நிலைமை சீரடைந்ததை அடுத்து, வரும் 18ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 15 மையங்களிலும் மீண்டும் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட, மாநகர காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.