பெரம்பலூர் அருகே தி.மு.க. வேட்பாளரிடம் கட்சித் துண்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு சுழற்சி முறையில் 3 பறக்கும்படை குழுக்களும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு சுழற்சி முறையில் 3 பறக்கும்படை குழுக்களும் என மொத்தம் 6 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் படை குழுக்களில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள், காவல்துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (22.12.2019) பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான பறக்கும் படை அதிகாரி துரைராஜ், ஆயுதப்படை காவலர் இளங்கோவன் ஆகியோர் செங்குணம் ஏரிக்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 4- வது வார்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலையரசன் என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி, காவலர் காரை சோதனையிட்டனர். அதில் தி.மு.க கட்சி துண்டுகள் உள்ளிட்ட 123 துண்டுகள் இருந்தன. இதையடுத்து அந்த துண்டுகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.