தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் 156 ஒன்றியங்களில் சரியாக இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 24,680 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,700 ஊராட்சித் தலைவர், 37, 830 வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றன, காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 05.00 மணிக்கு நிறைவடைகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தல் 158 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 30- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 பதவிகளுக்கு 4 நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் முன்னோட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.