உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரிய வழக்கில் நாளை (06.12.2019) தீர்ப்பை வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 என இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (06.12.2019) தொடங்குகிறது. இருப்பினும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யக் கோரி திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று (05.12.2019) காலை விசாரணைக்கு வந்தது. திமுகவை விட அதிக கேள்விகளை நீதிபதிகள் தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் வைத்துள்ளனர். தொகுதி மறுவரையறைகளை முழுமையாக முடித்துவிட்டீர்களா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு ஆம், 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறைகளை முடித்திருக்கிறோம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அப்படி என்றால் புதிய மாவட்டங்களை பிரித்து ஏன்? பிரித்ததற்கான நடைமுறைகளை பின்பற்றினீர்களா? குறிப்பாக இடஒதுக்கீடு முறைகளை சரியாக செய்திருக்கிறீர்களா? என்ற கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அதை இப்பொழுது செய்யவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொண்ட தொகுதி மறுவரையறை பணிகளை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் நீதிபதிகளுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. எனவே அந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திமுக தரப்போ இல்லை தள்ளிவைத்தால் மொத்தமாக தள்ளிவைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது.
அதனையடுத்து புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கலாமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என மதியம் 02.00 மணிக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நாளை (06.12.2019) காலை 10.30 மணிக்கு வழங்கும் என்று அறிவித்துள்ளனர்.