தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், சென்னை தேனாம்பேட்டையில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "45 வயதுக்கு மேற்பட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோரில் தற்போது வரை 27 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணிசெய்ய வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம். கரோனாவால், வரும் இரண்டு வாரம் சவாலான நாட்களாகப் பார்க்கப்படுகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று வரை 40,99,330 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து இதுவரை 54.85 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. 54.85 லட்சம் தடுப்பூசிகளில் 47.03 லட்சம் கோவிஷீல்டு, 7.82 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளது. தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பூசி பற்றிய தேவையற்ற கற்பனைகளை வளர்க்க வேண்டாம், வதந்திகளையும் நம்ப வேண்டாம். ஊரடங்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம், கட்டுப்பாடுகள் கைகொடுக்காத சூழலில் அதற்கான முடிவு எடுக்கப்படும். ரஷ்ய தடுப்பூசி தமிழகத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
மத்திய கிடங்கில் உள்ள 6 லட்சம் தடுப்பூசிகளை தமிழக அரசு கேட்டுள்ளது. 2,07,080 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழக சுகாதாரத்துறையிடம் 1.49 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது. மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் நோய்ப் பரவலை எளிதாகக் குறைக்க முடியும். மருத்துவர்கள் பரிந்துரைப்படியே ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 81,000 படுக்கைகள் தயாராக உள்ளன" இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.