பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துறைமுருகன். பொன்முடி, நாம் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், திராவிட கழக தலைவர் கி. வீரமணி, பாமக சார்பில் ஜி.கே.மணி. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் கோபண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69% சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு கட்டிக்காத்து வருகிறது. நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒதுக்கீட்டால் மேலும், அவர்கள் பாதிக்கப்படக்கூடும், அதே போல் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% ஒதுக்கீட்டை அவசரமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. 10% இட ஒதுக்கீட்டை திமுக எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது