கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, மதரீதியான பொய்த் தகவல்களை இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, உமர் பாரூக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழக டி.ஜி.பி.சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா வைரஸ் தொற்றுடன் மதத்தைச் சம்மந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் வெளியிட்டதாக, சென்னையில் 8 பேர் மீது 8 வழக்குகளும், மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள், கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பதில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரணையை ஜூலை 13- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.