ஏழு பேர் விடுதலையில் அரசு உறுதியாக உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம்; ஏழு பேர் விடுதலை தொடர்பாக வந்த பரிந்துரையை சட்டத்திற்குட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.