வாழ்வில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருமண நிகழ்வை, பலர் வியக்கும்படியும் சிறப்பாகவும் நிகழ்த்தவேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பானதே. ஆனால், சிலர் மலை உச்சியில் திருமணம், காற்றில் பறந்தபடி திருமணம், கப்பலில் திருமணம், கரோனா திருமணம் என வித்தியாசமாகவும் பிரபலமானதாகவும் தங்கள் திருமண நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.
அந்தவகையில், தற்போது கடலுக்கடியில் நடைபெற்ற திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (29) மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா(26) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பணியிட நண்பர்களாக இருந்தவர்கள் வாழ்கையை இணைந்தே தொடர திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவந்தன. தனது திருமணத்தை சாகசம் நிறைந்ததாக நடத்த விரும்பிய சின்னதுரை, ஆழ்கடலில் திருமணம் செய்யத் திட்டமிட்டார். அதனை, குடும்பத்தினரிடம் தெரிவித்து சம்மதத்தையும் பெற்றார். மேற்கொண்டு புதுச்சேரியைச் சேர்ந்த தனது உறவினரான ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தனின் வழிகாட்டுதலில் சின்னதுரை, ஸ்வேதா இருவரும் நீலாங்கரை கடற்பகுதியில் நான்கு நாட்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தகுந்த பயிற்சிக்குப் பிறகு மணமக்கள் இருவரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடலுக்குள் படகில் சென்று 60 அடி ஆழத்தில் முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணச் செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்குமுன் கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கடலில் 12 அடி ஆழத்தில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.