உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட 72 பேரில் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 866 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் இரண்டு பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.