புதுக்கோட்டையில் கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை தருவதால் கரோனா பரவல் தடுக்கப்படுகிறது. தொழில் முதலீடு குறித்து பொய்யான செய்தியை ஸ்டாலின் பரப்பி வருகிறார். முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய். இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பீட்டுத் தொகையை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசுதான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாசனக் கால்வாய்கள் குறிப்பிட்ட காலத்தில் தூர்வாரப்பட்டதால் நீர் கடைமடை வரை சென்று விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் வரலாற்று சாதனையாக 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏராளமான சாலைத் திட்டங்கள், பாலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக ஊசி போடப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். ரூபாய் 700 கோடி மதிப்பிலான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்." இவ்வாறு முதல்வர் கூறினார்.