தமிழக முதல்வர் தலைமையில் மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு சார்பில் கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிவிப்பில், மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கும், அவற்றைச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்த இந்த மாநாடு வழிகோலும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பிக்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அனைவரும் நேர்மையுடனும், வெளிப்படையாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.