தமிழகம், டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். அதேபோல், நாடு முழுவதும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் மே 3- ஆம் தேதி அன்று நடக்கவிருந்த தேர்வு (12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு) மட்டும் மே 31- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மற்ற தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இருப்பினும் தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த முடிவுகளை தலைமைச் செயலாளர் முதல்வரிடம் தெரிவிப்பார் என்றும், அதைத் தொடர்ந்து 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.