அண்மையில் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று தமிழக பாஜக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தில் இதற்காக தேசிய கொடிகள் சேகரிக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று 0.8.2022 புதன்கிழமை காலை 10:00 மணிக்கு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில மீனவர் அணி சார்பில் பிரம்மாண்டமான படகு பேரணி நடந்தது. இதில் சுமார் 250 மீனவ படகுகளுடன் ஆயிரம் மீனவர்களுடன் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈசிஆர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் கடலில் பேரணி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் மற்றும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.