தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமானது. தி.மு.க. வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். தேர்தல் நடந்த போதும் வாக்குகள் எண்ணிக்கையின் போதும் கரோனா பெருந்தொற்றின் நெருக்கடி காலம் என்பதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு செலவினங்களை செய்தது தமிழக அரசு.
அந்த செலவினங்களின் மொத்த தொகை 744 கோடி ரூபாய் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், தேர்தலுக்காக 618 கோடியும், வாகன வாடகை, விளம்பரங்கள், தொலைபேசி, எரிபொருள் உள்ளிட்ட செலவினங்களுக்கு 126 கோடியும் செலவு செய்யப்பட்டிருப்பதாக அந்த ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக்கான 618 கோடியில், வாக்கு மையங்களை தயார்படுத்துவது, வாக்கு எண்ணிக்கை, இது தொடர்பான பயணங்கள், அலுவலக செலவுகள், அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்குமான சம்பளம், கிருமி நாசினி அடித்தல், சானிடைசர்கள் மற்றும் கையுறைகள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இதில் அடங்கியுள்ளன.