தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதேபோல், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முதலில் நிறைவடையும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாக்காளர்கள் பட்டியலில் திருத்தும், பெயர் சேர்த்தல் உள்ளிட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. அதேபோல், அவ்வப்போது தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். மேலும், 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வட மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.