தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பேரவையில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், "இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட சுகாதாரத்துறை புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் உள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் புத்தகத்தை தமிழக சுகாதாரத்துறை எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியிருந்தது. புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநில கல்வி உரிமையை பாதிப்பதாக புதிய கல்விக்கொள்கை இருக்கிறது. இந்தி இடம்பெற்றதன் மூலம் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? மும்மொழிக்கொள்கையின் முன்னோட்டமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் என முதல்வர் தெளிவுப்படுத்திவிட்டார். தேசிய அளவில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை புத்தகத்தில் இந்தி இடம் பெற்றுள்ளது. இந்தி இடம்பெற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று விளக்கமளித்தார்.