தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (16/09/2020) துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாள் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று (15/09/2020) கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். நீட் தேர்வு தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.