திருமண விழா ஒன்றில் பங்கேற்க தமிழக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் தென் தமிழக மக்கள் அதிக அளவு பயன்பெறுவர். மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஜி.எஸ்.டி. உருவாக்கி இருக்கிறது. சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை பற்றி விழிப்புணர்வு தேவை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் பசுமை வழிச்சாலை தமிழகத்துக்கு மிகுந்த பலன் தரும். பசுமை வழிச்சாலை பற்றிய விழிப்புணர்வு முகாம்களை மாநில அரசு நடத்த வேண்டும்.
தூத்துக்குடி கலவரம் மக்களால் நடத்தப்பட்டது அல்ல. மக்கள் மட்டுமே அந்த போராட்டத்தில் பங்கேற்று இருந்தால் கலவரம் வெடித்து இருக்காது. மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் தங்களை மூளைச்சலவை செய்தனர் என்று மக்களே தெரிவித்து உள்ளனர்.
இதனைத்தான் முதலில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம். தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தன. இன்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும். பா.ஜனதா கட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள். ரூ.57 கோடி ஹஜ் மானியம் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி நக்வி தெரிவித்து உள்ளார். இவ்வாறு கூறினார்.