சட்டபேரவைக்கு கிழிந்த சட்டை அல்லது கருப்பு சட்டை அணிந்துசெல்ல வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் எண்ணம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
காலை 10.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும், பட்ஜெட் உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்,
சட்டபேரவைக்கு கிழிந்த சட்டை அல்லது கருப்பு சட்டை அணிந்துசெல்ல வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் எண்ணம். டிடிவி தினகரனின் புதிய அமைப்பால் தமிழகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.