Skip to main content

தமிழ் புத்தாண்டு- தமிழ்நாடு அரசுக்கு சசிகலா வேண்டுகோள்!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Tamil New Year - Sasikala's request to the Tamil Nadu government!

 

வி.கே. சசிகலா இன்று (03/12/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்மந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை. பின் எதற்காக, இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. அதேபோல் கடந்த வாரத்தில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் வைத்ததாக செய்திகள் வந்தன. பின்னர், மறுநாளே அந்த படம் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. 

 

இதுபோன்ற செயல்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகார மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்கு தொடர்ந்து எழுவதாக சொல்கிறார்கள். 

 

ஜெயலலிதா, தமிழ் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை, பல்வேறு ஆதாரங்களுடன் அன்றே தெரிவித்திருக்கிறார். அதை சரியாக புரிந்துகொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவடைவார்கள். எனவே, இதுபோன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு தங்கள் நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழிவகை செய்தாலே போதும், அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

 

ஆகையால், தமிழக அரசு, தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்