சித்திரை முதல் நாள் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் தேசம் எங்கும் விழாக் கோலம் பூண்டிருக்கும். விவசாயிகள் சித்திரை முதல் நாளில் ஏர் பூட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவதும், அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், விநாயகர் கோயில்களில் பொங்கல் வைத்து படையல் என்று அமர்க்களப்படும். ஆனால் இந்த ஆண்டு அத்தனையும் மாறியது. சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டினால் அந்த ஆண்டுமுழுவதும் விவசாயப் பணிகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்துள்ளது. அந்த பழக்கம் இன்றளவும் மாறவில்லை.
வேளாண்மையில் இயந்திரங்களின் தாக்கத்தால் மாடுகள் பூட்டி உழவு செய்வது குறைந்துவிட்டது. ஆனாலும் பழைய பழக்கத்தை மாற்ற முடியாமல் உழவு மாடுகளை கொண்டே ஏர் பூட்டி வருகின்றனர். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மக்களுக்கு நல்ல நாளாக அமையவில்லை. யாரும் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. கரோனா பரவலைத்தடுக்க அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. அதனால் தங்கள் வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்தியுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விநாயகர் கோயில்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் இந்த ஆண்டும் நடக்கவில்லை. அத்தனை கட்டுப்பாடுகளோடு சித்திரை முதல் நாள் நகர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், கொத்தமங்கலம், பொன்னமராவதி ஆலவயல், உள்ளிட்ட பல கிராமங்களிலும் வயல்களில் படையல் வைத்து வழிபாடுகள் நடத்தி மாடுகளை ஏர்களில் பூட்டி மரியாதை செய்து நல்லேர் ஓட்டினார்கள் விவசாயிகள்.
பரவாக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் நல்லேர் பூட்ட உழவு மாடுகள் இல்லாத விவசாயிகள் வயலில் படையல் வைத்து சூரியனுக்கு வழிபாடுகள் செய்த பிறகு டிராக்டர்களைக் கொண்டு உழவு செய்தனர். மரபு மாறாக தமிழர்களின் கலாச்சாரம் ஊரடங்கு நேரத்திலும் வெளிப்பட்டது.