1973 ஆம் ஆண்டு முதல் தமிழக காவல்துறையில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பெண் காவல்துறையினருக்கு இது பொன்விழா ஆண்டாகும். சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு தபால் தலையினை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ‘அவள்’ திட்டத்தைத் துவக்கி வைத்த முதலமைச்சர், மிதிவண்டி பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் அணிவகுப்பு மரியாதை முதற்கொண்டு அனைத்து நிகழ்வுகளும் முழுக்க மகளிர் காவல்துறையினரால் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 175 பெண் போலீசார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி பிரச்சார ஊர்வலம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (21.03.2023) திருச்சி மாவட்ட எல்லைக்கு வந்தடைந்த அவர்களுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் வரவேற்பு அளித்தார்.
இந்நிலையில் இன்று (22.03.2032) காலை போலீஸ் எஸ்.பி. சுஜித்குமார் அவர்களுடன் திருச்சி மாவட்டத்திலிருந்து மாவட்ட எல்லை வரை சைக்கிள் பேரணியாக சென்றார். தமிழக காவல்துறையின் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன்விழா நிகழ்வை தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னெடுப்புகளுடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.