வேலூர் மாவட்டத்தில், தினம் தினம் திருட்டு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. வீடு புகுந்து திருடுவது, திட்டமிட்டு ஏமாற்றி திருடுவது, பைக்கில் வந்து திருடுவது என பல வழிகளில் திருடுகின்றனர். இப்படிப்பட்ட திருடுகள் மக்களின் அஜாக்கிரதையாலும் நடக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்காக வேலூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில் நகர காவல் நிலையம் சார்பாக விழிப்புடன் இருப்போம் திருட்டை தடுப்போம் என்ற வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒய்.எம்.சி காலனி பகுதியில் வீடுவீடாக சென்று துண்டு பிரசாரம் செய்தார்.
துண்டு பிரச்சுரத்தில், பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது தங்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் பணம் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்ல வேண்டும், வெளியூர் செல்கிறோம் என காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.
பெண்கள் நகைகளை அணிந்துகொண்டு நடந்து செல்லும் பொழுது, அந்த நகைகளை புடைவையால் மூடி செல்ல வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்யும் போது தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக வீடு வாடகைக்கு கேட்டு வருபவர்களிடம், முழு விலாசம், ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை வாங்க வேண்டும். வந்தவர்கள் மீது சந்தேகம்மிருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
சந்தேக நபர்கள் மற்றும் புதிய நபர்களை தங்கள் பகுதி மற்றும் தெருக்களில் கண்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
உறவினர் அல்லாதவர்களையும் புதிய நண்பர்களையும் வடமாநில நபர்களையும் எக்காரணத்தைக்கொண்டும் வீட்டிற்குள் அனுமதிப்பதையும் தங்க வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தங்கள் பகுதி மற்றும் தெருக்களில் தங்க நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக வரும் நபர்களிடம் நகைகளைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.
அனைவரும் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும். இரு சக்கர வாகனங்களை வீட்டின் வெளியில் நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்ல வேண்டும் என்றும் மேலும் கூடுதலாக முன் ஒயர் லாக் போட்டு பூட்டி வைக்க வேண்டும். வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது சந்தேக நபர்கள் உங்களை கவனத்தை திசை திருப்பி உங்கள் பணத்தை திருடிச் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதால் சந்தேக நபர்கள் கூறும் எதையும் நம்பகூடாது.
இரு சக்கர வாகனத்தில் பெட்டி மற்றும் டேங்க் கவரில் பணம் வைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி நம்பர் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும் திருடு நடந்துவிடுகிறது. அதுப்பற்றி காவல்நிலையத்தில் புகார் தந்தால், அதனை பதிவு செய்யாமல் விரட்டுவது, மீறி பதிவு செய்தாலும் திருடு போன பொருட்களையும், அதன் மதிப்பையும் குறைத்து பதிவு செய்வது, திருடனை கண்டறிந்து பொருட்களை மீட்டாலும் பாதிக்கும் மேற்பட்ட பொருட்களை தராமல் இழுத்தடிப்பது, திருடனை தேடிச்செல்கிறோம் என திருடு கொடுத்தவர்களிடம்மே பணத்தை பிடுங்காமல் இருக்க வேண்டும். இதனையும் அதிகாரிகள் தங்கள் துறையில் அறிவுறுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.