இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பயணமாக சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். பின் ஹெலிகாப்டர் மூலம் அடையாறு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடி சென்னை, கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். இதன் பின் சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து சென்னை பல்லாவரத்தில் ரூ.3684 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், வணக்கம் தமிழ்நாடு எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், விமானம், ரயில், சாலை என பல கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் புத்தாண்டு பிறக்கவுள்ள போது புதிய சக்தியான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது எனவும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்புத் துறையில் புதிய புரட்சியை இந்தியா செய்து வருகிறது என்றும் கட்டமைப்பு முதலீட்டிற்காக ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் இருப்பிடமாக தமிழ்நாடு விளங்குகிறது எனவும் பிரதமர் கூறினார். தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளைக் கொண்டது எனக் கூறிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.