கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் பஞ்சாயத்து அலுவலகத் திறப்பு விழா மற்றும் திட்டப் பணிகள் தொடக்க விழாவில், 27ஆம் தேதி கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்கள் சந்திப்பில், “அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது குறித்து ஏதாவது தகவல் அல்லது புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் சர்வீஸ் சென்டர் செயல்படுகிறது. நடப்பாண்டு மட்டும் 32 மாவட்ட நூலகங்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்து 480 மாணவ - மாணவிகள் நீட் தேர்வு பயிற்சிப் படிப்பில் பயின்று வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான். அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் 'கல்வி' தொலைக்காட்சி மூலமும் ஆன்லைன் மூலமும் பாடம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை விளக்கம் அளித்து வருகின்றனர். தற்பொழுது பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் பகுதியில் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போதும் இந்த ஆய்வு நடைபெற்று, பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
நமது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், 'நிவர்' புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதை அனைத்து ஊடகங்களும் பத்திரிகைகளுமே பாராட்டியுள்ளன. முதலமைச்சரும் நேரடியாக, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, புயல் நிவாரணப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். முதல்வரை அனைவரும் பாராட்டுகின்றனர். கோபி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ.6.75 கோடி மதிப்பில் துவக்கி வைக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள இந்திரா நகர் குளத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் குழந்தைகள் படகு சவாரி செய்ய, இரண்டு படகுகள் வாங்கப்பட்டுள்ளன. அங்குள்ள பூங்காவும் திறந்து வைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்குத் தலமாக அது திகழும்” என்றார்.