முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், 82.32 கோடி ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் ஓபிஎஸ்க்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், 2015 - 2016ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 2018ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரிப்பணத்தை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஓபிஎஸ்க்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசின் பேரில் மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது நேற்று (25.11.2021) சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பி.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, கடந்த 2020இல் கொண்டுவரப்பட்ட வருமான வரி சட்டத்திருத்தத்திற்கு முரணாக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்து செலுத்த வேண்டிய தொகை ரூ. 82.32 கோடி குறித்து மனுதாரருக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த நோட்டீசுக்குத் தடை விதிக்க வேண்டும். நோட்டீஸ் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.
வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாசன் ஆஜாரகி, மனுதார் 2017 - 2018ஆம் ஆண்டுக்கான வரியை செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு 2020இல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் பொருந்தாது. சட்டத் திருத்தம், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்துதான் அமலுக்கு வந்துள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நோட்டீசுக்குத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கான வருமான வரி மறுமதிப்பீடு உத்தரவு இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டார்.