விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகிலுள்ள கலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி, வயது 62. இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டு, டிசம்பர் 2ஆம் தேதி, 7 மணி அளவில் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் அரசுப் பேருந்தில் ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். அப்படி வரும்போது அவர் அணிந்திருந்த 23 பவுன் நகையைக் கழட்டி ஒரு சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அதை ஒரு பைக்குள் வைத்து எடுத்து வந்துள்ளார்.
விழுப்புரம் புது பேருந்து நிலையம் வந்து இறங்கும்போது, சென்னையிலிருந்து மூதாட்டியின் அருகில் அமர்ந்து பயணம் செய்துவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மூதாட்டி வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி சக பயணிகளிடம் கூறி அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து உள்ளார். அப்போது அப்பெண் தனது பையை எடுப்பதற்குப் பதிலாக, மூதாட்டி பையைத் தவறுதலாக மாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி, மூதாட்டி விஜயலட்சுமியிடம் அவரது பையை ஒப்படைத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதை நம்பி, பையை வாங்கிய மூதாட்டி, அதே இடத்தில், நகை உள்ளதா என்பதை திறந்து பார்க்காமல், தனது பையை எடுத்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சொந்த ஊரான, கலந்தல் கிராமத்திற்குச் சென்றுவிட்டார். பின்னர், வீடு சென்ற விஜயலட்சுமி, தன்னுடைய பையைத் திறந்து பார்த்தபோது, அதில் 23 பவுன் நகையை வைத்திருந்த சிறிய பெட்டியைக் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமிக்கு, விழுப்புரத்தில் பேருந்தைவிட்டு இறங்கும்போது பையைத் தவறுதலாக மாற்றி எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறிய அந்தப் பெண்ணே நகையைத் திருடிச் சென்றுள்ளார் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து மூதாட்டி விஜயலட்சுமி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி வைத்திருந்த நகையைத் திருடிச் சென்ற அந்த மர்ம பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நகையின் மதிப்பு ஏழரை லட்சம் என்று கூறப்படுகிறது.