டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் பா.ஜ.கவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் ஒதுக்கப்படவில்லை. அதே போல் பா.ஜ.கவில் ஏற்கனவே தேசிய அளவில் பொறுப்பில் இருந்த எச்.ராஜாவுக்கும் பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.கவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என ஒவ்வொரு கூட்டங்களிலும் பா.ஜ.க தலைவர் முருகன் பேசி வரும் நிலையில், பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகம் இடம்பெறாமல் இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா.ஜ.கவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிட தயாராக உள்ள நிலையில் தற்போது ஜே.பி.நட்டாவை முருகன் நேரில் சந்தித்திதுள்ளார். இந்த சந்திப்பில் இரண்டாம்கட்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என முருகன் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.