முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார்.
சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினார்.
அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (04-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, மறைந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிடுவதாக கூறினார். அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் முனியப்பராஜ், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கின்றனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளனர்.
அவர்கள் மூவரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தயாராக இருக்கிறது. எனவே, அவர்களை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் மூன்று பேர் தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் மூன்றும் பேரும் தனித் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.