இயற்கைப் பேரிடர்கள் அடுத்தடுத்து வந்தபோதிலும் அவற்றைச் சந்திக்க எந்த விதத்திலும் தயாராகாத தமிழக அரசு! அதனால் இன்று குரங்கணி மலை காட்டுத் தீ விபத்திற்கும் மனித உயிர்களை பலி கொடுக்க வேண்டிய விபரீதம்! மீட்புப் பணியினைச் சரிவரச் செய்து பலியானோர் குடும்பத்திற்கு பரிகாரம் தேடவும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் சென்றிருந்தனர்.
அவர்கள் தங்கள் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பலாம் என்றிருந்தபோது, திடீரென காட்டுத்தீ மலையின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் நோக்கிப் பரவி வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்.
கட்டுப்படுத்த முடியாதபடி பரவும் அந்தத் தீ வளையத்தில் மாணவிகளும் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் பலியாகிவிட்டதாகவும் 27 பேர் மோசமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்களும் கூடவே கேரள போலீசும்கூட மீட்புப் பணியில் களமிறங்கியிருக்கின்றனர். மூணார் டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவும் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே அங்கு சென்ற தமிழகப் படைக்கு உதவியாக இவர்கள் செயல்பட்டுவருகிறார்கள்.
இதில் மனித உயிகள் பலியானதை தடுக்க முடியாது போனதற்குக் காரணம், அடுத்தடுத்து பேரிடர்கள் வந்தபோதிலும் அதிலிருந்து நாம் எந்த பாடத்தையும் கற்காததுதான்,
புயல் வந்திருக்கிறது; பெருவெள்ளம் வந்திருக்கிறது; ஏன் சுனாமியே வந்தது. இருந்தும் நாம் பாடம் கற்கவில்லை.
அண்மையில் ஒகி புயலில் சிக்கிய நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை நமக்குத் தெரியாது.
நம்மிடம் ஒரு ஹெலிகப்டர்கூட கிடையாது இது போன்ற சமயங்களில் மீட்புப் பணியில் இறங்க!
மீட்புப்பணி மட்டுமல்ல, தடுப்புப்பணி அதாவது பாதுகாப்புப்பணியும் முக்கியம். அதற்கு தயார்நிலை அமைப்பு தேவை. அது இத்தனை காலமாகியும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 2001 முதல் 2011 வரையிலான அந்த காலம் முழுவதுமே தொடர்ந்து ”இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அமைப்பை” உருவாக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே குரல் கொடுத்து வந்தேன்.
ஆனால் நாளது வரை ”இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அமைப்பு” அமைக்கப்படவில்லை.
இந்த குரங்கணி வனத் தீ விபத்தை அடுத்தாவது ”இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அமைப்பை” உடனடியாக உருவாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தற்போது இந்த குரங்கணி வனத் தீ விபத்து மீட்புப் பணியினைச் சரிவரச் செய்வதுடன், இதில் பலியானோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.