நேற்று (22.09.2021) 'ஏற்றுமதியில் ஏற்றம்: முன்னணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் 'மேட் இன் இந்தியா' என்று சொல்வதைப் போல், 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசையும், லட்சியமும்'' என்றார்.
இந்த மாநாட்டில் ரூபாய் 2,210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அந்த மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி, தொழில், வேளாண், கால்நடைத்துறைச் செயலாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த மேம்பாட்டுக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழில்துறைச் செயலாளர் தலைமையில் நிர்வாக துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.