தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில் வரும் 31ம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது, கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகளோடு முதல்வர் தற்போது ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, இரவு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து தொடர்பாக விவாதிக்க அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சிறிய அளவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் வியாபாரிகள் ஞாயிறு பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருவதால் ஞாயிறு பொதுமுடக்கம் மட்டும் ரத்து செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.