தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தற்போது வரை மாறுபட்ட கருத்துக்கள் இருந்து கொண்டே வருகிறது. மேகதாது அணையை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடக அரசு சார்பில், மேகதாது அணை கட்டப்படும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள ஜூஜூவாடியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'முற்றுகைப் போர்' என்கின்ற தலைப்பில் திருவாரூரில் பேரணியை தொடங்கிய தமிழக விவசாயிகள் தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக ஓசூர் சென்றடைந்தனர். மேகதாது அணை கட்டுவதை வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டினர். பல்வேறு கோரிக்கைகளுடன் மாநில எல்லைக்குள் புகுந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.