உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மற்றும் சமையலர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் தபால் வாக்கு பதிவு செய்ய முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைசிவரை அவர்களை வாக்களிக்க அனுமதிக்காததால் ஜனநாயக கடமையாற்ற முடியாமல் விரக்தியோடு கலைந்துசென்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் சமையலர்கள் என 600 க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை கடந்த 27 ஆம் தேதி அன்று நடந்த முதற்கட்ட தேர்தல் பணிக்காக சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் பணிக்கு செல்லும்போது தபால் ஓட்டு படிவத்தை கேட்டபோது, 30 ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்துக்கொள்ளலாம் என பணிக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட தேர்தல் பணிகள் முடிந்து இன்று தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய சீர்காழி, கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று பணியாளர்கள் வந்தனர்.
அங்கு தபால் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை கேட்டுள்ளனர். அதிகாரிகளோ இனிமேல் தபால் வாக்கு பதிவெல்லாம் செய்ய முடியாது, வீட்டுக்கு போயி வேலைய பாருங்க என கடிந்து கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சீர்காழி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல் துறை டி.எஸ்.பி வந்தனா அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ, எங்களுக்கு உண்டான தபால் வாக்குகளை செலுத்த வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தனர். இரண்டாவதுக் கட்டமாக தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அங்கிருந்தவர்களை போலீசார் அதிரடியாக மிரட்டி அப்புறப்படுத்தினர்.
இது குறித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களிடம் கேட்டோம்," சத்துணவு பணியாளர்களில் பெரும்பகுதியினர் திமுகவைச்சேர்ந்தவர்கள், என்பதால் அதிமுகவினரோடு தேர்தல் அதிகாரிகளும் சேரந்துகொண்டு எங்களுக்கான ஜனநாயக கடமையை மறுக்க செய்துவிட்டனர். சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களில் நடந்த தேர்தல் பணிக்கு வெறும் அறுநூரு, ஆயிறம் ரூபாய்க்காக தேர்தல் பணிக்கு சென்றதால் எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இனி வரும் காலங்களில் நடக்கும் தேர்தல் பணிக்கு செல்வதை தவிர்ப்பதே நல்லது என முடிவெடுத்துவிட்டோம்," என்கிறார்கள் கலக்கமாக.