சில தினங்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் அங்கன்வாடியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்தது.
அதேபோன்று கடந்த 21 ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித-வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன. தமிழக முதலமைச்சர், இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக, இரு மடங்கு உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.