கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பட்ஜெட்டில் மேகதாது அணை பெங்களூருக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாக இருக்கும் எனவே மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழ்நாடு காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக மாநிலம் மீறுவதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது'' என அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.