2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
அடுத்த நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
கடந்த சில வாரங்களாக உழவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உழவர்களின் கோரிக்கைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு சமீபத்தில் வெளியிட்ட அங்கக வேளாண் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல புதிய அம்சங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.