கற்பனையையும் தாண்டிய வேகமெடுக்கிறது கரோனாவின் ஆக்டபஸ் கொடுக்குகள். கண்ணுக்குத் தெரியாத அந்த மாயாவிக் கொடூரனை எதிர்த்து மருத்துவ உலகம் போராடி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, ஊரடங்கிற்குள் முழுமுடக்கம், தளர்வுகள் என மேற்கொள்ளப்பட்டும், பரவல் கிராஃப் இறங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ.வே.பாஸ் என்ற கட்டுப்பாட்டினிடையே மாவட்டத்திற்கு, மாவட்டம் செல்ல அந்த பாஸ் கட்டாயம் என்று மாறி மாறி அறிவிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டங்களில் பாஸ் முறை தாமதமின்றி அனுமதிக்கப்பட்டாலும், மாநிலத்திலிருந்து புலம் பெயர்பவர்களுக்கு இ.வே.பாஸ் அத்தனை சுலபமில்லை. விளைவு பிள்ளைக் குட்டிகளோடு மாநில எல்லை சாலையோரம் உணவு, உறைவிடமின்றி சுருள வேண்டியதுதான்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா, பந்தளம், கோட்டயம் பகுதிகளில் தமிழகத்தின் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து பிழைப்பின் பொருட்டு வேலைக்குப்போன குடும்பங்கள், கரோனா ஊரடங்கு காரணமாக அங்கு வேலையில்லாமல் போனதால் சொந்தப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அப்படி தாயகம் திரும்பிய 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு செக் போஸ்டில் இ.வே.பாஸ் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழகம் வரமுடியாமல் தவிக்கிறார்கள். ஐந்து நாட்களாக உண்ண உணவு, உடுக்க உடை, உறைவிடமின்றித் தவிப்பவர்கள் அந்தப் பகுதி சாலையோரத்தில் பாதுகாப்பின்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்குள் அனுமதிக்க தொடர் வேண்டுகோள் விடுத்தவாறிருக்கின்றனர். அவர்களுக்கு விடியல் எப்போது.