தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கைத் தமிழிசை சௌந்திரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அப்பொழுது சிலர் தன்னை ஒருமையில் பேசுவது வேதனையைத் தருவதாக மேடையில் பேசினார். அப்போது பேசிய தமிழிசை, ''ஒரு இணையதளத்தில் வீடியோ ஒன்று பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர் என்னைப்பற்றிப் பேசுகிறார். இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள் என்று ஒருவர் பேசுகிறார். இரண்டு மாநிலத்திற்கு ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான விஷயம்.
அதிலும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் அண்ணா விருது வாங்கிய ஒருவர் ஒருமையில் பேசுகிறார். இவளெல்லாம் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநர் என்று. ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், தயவுசெய்து திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு. இல்லையென்றால் நீங்கள் தமிழரே கிடையாது'' என்றார் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான விவாதங்கள் சில நாட்களாக தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று மேலும் பேசிய தமிழிசை, " தமிழகத்தில் யாரெல்லாம் மரியாதை தருகிறார்களோ அவர்களை தமிழ் வாழவைக்கும், அவமரியாதை செய்பவர்களை தமிழன்னை பார்த்துக்கொள்வாள்" என்று தெரிவித்துள்ளார்.