காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊரப்பாக்கத்தில் கட்சியினரிடையே பேசினார்.
அப்போது அவர், எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
‘
தமிழகத்தில் இன்றைக்கு நடைபெறும் இந்த ஆட்சியானது ஏழை, எளிய மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் செய்யாமல் தவிர்த்து வருகிறது. அதேபோல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் எந்த ஒரு பலனும் இல்லை.
இந்த ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தினாலும் தமிழக மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. குறிப்பாக இளைய சமுதாயம் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் இல்லை. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவில்லை.
இன்றைக்கு நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் யாருக்கோ காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை சந்திக்க பயமாக இருக்கிறது. அதனால்தான் திவாரூர் தேர்தலை சந்திக்க பயந்தார்கள். தேர்தல் நடந்திருந்தால் தீர்ப்பு என்னவென்று தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தலை கண்டு பயப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் ஒன்றாக வரும்போது கூட்டத்தில் கோவிந்தாபோட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு பேசினார்.