வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் சென்னாம்பேட்டை பகுதியில் தக்கடி தெருவை சேர்ந்தவர் 42 வயதான ஜமாலுதீன். இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்படைந்தது. இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதுதான் பிரச்சனையோ என பயந்த அவரது குடும்பத்தார் உடனடியாக ஈரோடு அழைத்துச்சென்று அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள்.
அங்கு அவருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக கடும் காய்ச்சல் நிலவியதால் அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜமாலுதீன் க்கு பன்றிக்காய்ச்சல் என வேலூர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தந்தனர். அதன் அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சிக்கு சுகாதார ஆய்வாளர் டாக்டர் அஜீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாணியம்பாடி மருத்துவர் தேன்மொழி தலைமையில் மருத்துவ குழு சென்னாம்பேட்டையில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் முகாம் அமைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். துப்பரவு பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டுள்ளனர். வாணியம்பாடியை சேர்ந்த ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் வந்துள்ளதால் இது பரவி விடும்மோ என அச்சமாகவுள்ளனர். சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.