தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி, “எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதலமைச்சர் என்னை அழைத்திருந்தார். அவரது வீட்டிற்குச் சென்றது அவரை பார்த்தது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைத்தது மிக சந்தோசமாக உள்ளது.
எனக்கு பரிசுப் பொருட்கள் எல்லாம் வழங்கி என் உயர்கல்விக்கு உதவுவதாக சொன்னார். மிக சந்தோஷம். முதலமைச்சருக்கும் அரசுக்கும் மனமார்ந்த நன்றி. உயர்கல்விக்கு தேவையான செலவுகளை பார்த்துக் கொள்வதாக சொன்னார். ஆடிட்டிங் படிக்க இருப்பதாக சொல்லி இருந்தேன். கல்வி நிறுவனங்களை விசாரித்து எனக்கு பரிந்துரை செய்வதாகவும் சொல்லியுள்ளார்.
600க்கு 600 மதிப்பெண்கள் பெற்றது எளிமையாக பெற்றது என்பதைத் தாண்டி அனைத்திற்கும் உழைப்பு இருந்தால் உயர்வு கண்டிப்பாக இருக்கும். பெற்றோர் கொடுத்த ஆதரவு, ஆசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை ஆகியவை என்னை இத்தனை தூரம் அழைத்து வந்துள்ளது. மிக மகிழ்ச்சி” எனக் கூறினார்.