பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிறது என்று கூறி இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை மூலம் பாஜக தனது பொருளாதாரத்தை இயக்க நினைக்கிறது. இந்தச் சட்ட விவகாரத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாறுபட்ட அறிக்கைகளை வழங்குகிறார்கள். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது" என தெரிவித்தார்.