திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனிமுருகன் கோவிலுக்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். காலை 08.00 மணிக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அவர், பழனி முருகனை அலங்காரத்தில் தரிசனம் செய்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் மற்றும் தேமுதிகவின் கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுக்காக பூஜை செய்தார். அதை தொடர்ந்து மலைக் கொழுந்து அம்மன் கோவிலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டார்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தவர். அதிமுக- தேமுதிக கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றும், கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.
தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடிரூபாய் வழங்கியதாக வரும் தகவலை திமுக தலைவர் ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டியில் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் பாலு, நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.