Skip to main content

முகமது நசீமுதினின் அனுபவம், நிபுணத்துவம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
cou

 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட முகமது நசீமுதினின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளராக உள்ள முகமது நசீமுதீனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வழங்கி கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தமிழக பொதுத்துறை அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த போதிய அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ இல்லாத முகமது நசீமுதீன் எந்த தகுதியின் அடிப்படையில் மாசுகட்டுபாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு விளக்கம் அளிக்கவும், முகமது நசீமுதீன் தன்னிலை விளக்கம் அளிக்கவும் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அறங்காவலரான சுந்தர்ராஜன் கோ-வாரண்டோ வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிபுணத்துவம் இல்லாதவரை நியமித்துள்ளதாகவும், ஒரு துறையின் நிர்வாக பணியில் உள்ளவருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கியது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் வாதிட்டார்.

 

அப்போது நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தலைவரை நியமிப்பதற்கான விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை என அரசிடம் கேள்வி எழுப்பினர். 

 

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ப்பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், தலைவர் பதவி நியமனம் தொடர்பாக விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், முகமது நசீமுதீனின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவையென தெரிவித்தார்.

 

அதனையேற்ற நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்