புதுச்சேரி வங்கியில் போலி நகை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வங்கி நகை மதிப்பீட்டாளர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி நேரு வீதியில் சிண்டிகேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் நகை கடனுக்கு அளிக்கப்பட்ட நகைகளை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அடகு பெறப்பட்ட நகைகளில் போலிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் நகை மதிப்பீட்டாளரான ஐயப்பன், போலி நகைகளை உண்மையானவை என சான்றளித்து கடன்களை பெறச்செய்திருப்பதும், கடன்களை அவரது நண்பர்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து வங்கி மேலாளர் பவன்குமார் அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் நகை மதிப்பீட்டாளர் ஐயப்பன், வங்கி முகவர் முனுசாமி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து நகையை அடக்கு வைத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வங்கிக்கு வந்து தங்களது நகை பத்திரமாக உள்ளதா என உறுதி செய்தவண்ணம் உள்ளனர். வழக்கு பதிவு செய்தவுடன் ஐயப்பன் தனது நண்பர்களுடன் தலைமறைவாகி உள்ளார். அவர் பிடிபட்டால் மோசடியின் மதிப்பு தெரியவரும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.