குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதால் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோரி செங்குன்றத்தைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் தொடர்ந்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சையத் இப்ராஹிம் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பாக முஸ்லீம் இளைஞர்களிடம், தான் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ்நாட்டைச் சேர்ந்த இசுலாமிய அமைப்புகள் மற்றும் அதனைச் சார்ந்து இயங்கும் எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டில் உள்ள எந்த மசூதியிலும் தான் தொழுகை செய்ய முடியாதவாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னுடைய வழிபாட்டு உரிமையை பறித்ததோடு, தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்ததன் காரணமாக காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தனக்கு தற்போது இரண்டு காவலர்கள் முழுநேரம் பாதுகாப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போது தனக்கு மட்டுமின்றி தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்..
இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு,வழக்கு விசாரணை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.